Monday, September 11, 2017

நல்லதோர் வீணையாய்....

"நல்லதோர் வீணையாய் "அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை" யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே" தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"  இருக்கும்வரைச் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனென  இன்றளவும்
 அவன் மட்டுமே பரிமளிக்க முடிகிறது

5 comments:

Unknown said...

வாழ்க பாரதி! நலமா இரமணி!த ம 2

G.M Balasubramaniam said...

பாரதிக்கு ஒரு அஞ்சலி

Unknown said...

முண்டாசுக் கவிஞனுக்கு நல்லதோர் கவிதாஞ்சலி :)

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான வரிகளில் எட்டையபுர மீசைக்காரருக்கு அஞ்சலி!

கரந்தை ஜெயக்குமார் said...

பாரதி போற்றுவோம்
தம+1

Post a Comment