Wednesday, March 16, 2016

சொர்க்கமது ஆனாலும் கூட----

பிடிச் சோறு ஆனாலும் கூட -அது
மிகப்பழசே ஆனாலும் கூட -நீ
பிழிந்துஇட  உண்ணுகிற சுகமே -அது
தேவலோக அமுதுக்குச் சமமே

எட்டுவகைக்  காய்கறிகள் கூட -உடன்
எறாநண்டும்  சேர்த்திருந்தும்  கூட-சோத்தை
தொட்டெடுக்க மறுக்குதடி மனமே-இந்தக்
கூத்துஇங்கு தொடருதடி தினமே

ஒருமொழியே ஆனாலும் கூட-அது
வசைமொழியே ஆனாலும் கூட-அது
திருமொழியாய்த் தெரியுதடி எனக்கு-உன்னைப்
பிரிந்துஇங்கு தவிக்கின்ற எனக்கு

நாகரீக உடையணிந்த மாந்தர்-தினம்
நுனிநாக்கில் கதைத்தாலும் கூட-அது
சோகமேற்றிப் போகுதடி எனக்கு -உன்னை
எண்ணிதினம் துடிக்கிற எனக்கு

குச்சிவீடு என்றாலும் கூட-வசதி
மிகக்குறைவு  என்றாலும் கூட-கண்ணே
நிச்சயசமாய் சொர்க்கமது தானே-அதுவே
கடல்தாண்டப் புரியுதடித் தேனே

கண்ணைவித்து ஓவியத்தை வாங்கி -மனம்
களிக்கின்ற கிறுக்கனவன்  போல-இங்கு
உன்னைவிட்டு வசதிசேர்க்க நானும்-இளமை
வாழ்வதனைத் தொலைக்கிறேண்டி நாளும்

சொர்க்கமது  ஆனாலும் கூட - அது
நம்மூரைப் போலாகா தென்று- கவிஞன்
சொல்லியது சத்தியமாய் நிஜமே-இதனை
அங்கிருப்போர் அறிந்துகொண்டால் நலமே


(குடும்பத்திற்காக ,குடும்பம் பிரிந்து
அயல் நாட்டில்  அல்லறும்  நண்பர்களுக்கு
இக்கவிதை என் எளிய  சமர்ப்பணம் ) 

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தவிக்கும் மனதிற்கு ஆறுதல் தரும் வரிகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கண்ணைவித்து ஓவியத்தை வாங்கி -மனம்
களிக்கின்ற கிறுக்கனவன் போல-இங்கு
உன்னைவிட்டு வசதிசேர்க்க நானும்-இளமை
வாழ்வதனைத் தொலைக்கிறேண்டி நாளும்//

சம்பந்தப்பட்ட அனைவரையும் நன்கு யோசிக்க வைக்கும் வைர வரிகள் இவை !

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

அருமை. மனதில் இருக்கிறது சொர்க்கமும் நரகமும்!

தி.தமிழ் இளங்கோ said...

வாழ்க்கையைப் பற்றிய உண்மையான படபிடிப்பு உங்கள் வரிகள்.

S.P.SENTHIL KUMAR said...

வெளிநாட்டில் வேலை பார்க்கும் நண்பர்களின் உள்ளத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் கவிதை இது.
த ம 4

Thulasidharan V Thillaiakathu said...

அருமை! உண்மையான வரிகள்

கோமதி அரசு said...

உண்மையான வார்த்தைகள். கவிதை அருமை.

Post a Comment