Tuesday, August 4, 2015

எல்லாம் நமக்குள்ளே

ஒரு மொட்டை
மலரச் செய்வதற்கோ
மலர்ந்ததை
வாடச் செய்வதற்கோ
வாடியதை
கருகச் செய்வதற்கோ
கதிரவன் நித்தமும் உதிப்பதில்லை

அவன் தன்
கருணை ஒளியை
பாரபட்சம் ஏதுமின்றி
அனைவருக்கும் சமமாகவே
விரித்து வைத்துப் போகிறான்

அந்தக் கருணை ஒளி
வரமாவதும்
சாபமாவதும்
அவரவர் நிலைபொருத்தேயன்றி
அவன் பொருத்தல்ல

ஒரு செடியை
வளரச் செய்யவோ
வளர்ந்ததை
செழிக்கச் செய்யவோ
செழித்ததை
அழுகச் செய்யவோ
வான்மழை பரவிப் பெய்வதில்லை

அது தன்
அமுதக் கலசத்தை
பாரபட்சம் ஏதுமின்றி
அனைவருக்கும் சமமாகவே
அள்ளிக் கொடுத்துச் செல்கிறது

அந்த அமுதம்
அமுதமாவதும்
விஷமாவதும்
அதனதன் நிலைபொருத்தேயன்றி
மழை பொருத்தல்ல

உலகில் ஒருவனை
வாழ வைக்கவோ
வாழ்பவனை
உயரச் செய்யவோ
உயர்ந்தவனை
தாழச் செய்யவோ
தெய்வம் தன் அருளை வழங்குவதில்லை

"அது " தன்
பேரருளை
பாரபட்சம் ஏதுமின்றியே
அனைவருக்கும் சமமாகவே
பொழிந்து போகிறது

"அதன் " அருள்
பயன்பட்டுப் போவதும்
பயனற்றுப் போவதும்
அவனவன் திறன்பொருத்தேயன்றி
"அதன் "பொருத்தல்ல 

12 comments:

KILLERGEE Devakottai said...

T. M 2

Anonymous said...

அது என்ன திறன்? அது எல்லோருக்கும் சமமாக கிடைக்கிறதா? வறுமை, நற்கல்வி இல்லாமை இவைகளை வைத்து கொண்டு எப்படி மேல்தட்டு நகர மக்களோடு போட்டி போடுவது. எப்படியோ மேலே வந்தாலும் இனம் , சாதி, பாகு பாட்டால் மிதிக்கபடுவது பொது சனம். 'அதன்' அருள் என்று புளுகி அவாள் அனுபவிப்பது தான் மிச்சம். ஆறறிவு தன் நோய் போல் கருத வைக்க வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அதற்கான வாய்ப்பே இல்லையே இங்கே.
இந்த 'அதன் அருள்' இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன?

கோமதி அரசு said...

நல்ல கவிதை.

Yaathoramani.blogspot.com said...

Anonymous //

என் கருத்தை நானெனத் தெரியும்படிச்
சொல்லியிருக்கிறேன்
உங்கள் கருத்திலும் ஞாயம்
இருக்கத்தான் செய்கிறது
மனம் திறந்துச் சொன்னதை
முகம் தெரியச் சொன்னால்தான் என்ன ?

balaamagi said...

வணக்கம்,
யார் அருள்,,,,,,
ஆனாலும் கவி அருமை, வாழ்த்துக்கள்,,,,,,,,,,,
நன்றி

Yaathoramani.blogspot.com said...


mageswari balachandran //.

நம்புவோருக்கு "அவன் " இறைவன்
நம்பாதோருக்கு " அது " இயற்கை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஆத்திகவாதியும், நாத்திகவாதியும் ஏற்கும் கவிதை. நன்றி.

G.M Balasubramaniam said...

கவிதை நன்றாக வந்திருக்கிறது ஆனால் சொல்லப் பட்ட கருத்துஏற்புடையதாய் இல்லை. ”அது” எனப்படுவது தன் பேரருளை(அப்படி ஒன்று இருந்தால்) பாரபட்சமின்றி வழங்குகிறது என்பதில் உடன் பாடில்லை. கதிரவனும் மழையும் எல்லோருக்கும் சமம் என்பது போல் பேரருள் இல்லை. நம்பிக்கை என்னும் முகமூடியால் உணர்ந்த முற்படுத்தபடுவது.

G.M Balasubramaniam said...

மேலே உணர்த்த என்றிருக்க வேண்டும்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam

நீங்கள் இயற்கையெனப் பொருள்
கொண்டால் சரியாயிருக்கும்

KILLERGEE Devakottai said...

ஆத்திகமும், நாத்திகமும் கொஞ்சுகின்றது கவியில்....

Thulasidharan V Thillaiakathu said...

அட! அருமை! ஆத்திகன் என்றால் இறைவன் எனலாம்...நாத்திகன் என்றால் இயற்கை எனலாம்...அருமையான கவிதை!

Post a Comment