Tuesday, March 31, 2015

குஞ்சென்றும் மூப்பென்றும். ....

தீபஜோதியின் மையத்து இருளாய்
மெல்லக் கிளம்பிய வெறுமை
ஆழ்கடலின் வெற்றிடமாய் விஸ்ரூபமெடுத்து
அவனை எங்கெங்கோ
அலையவைத்து போகிறது
அவன் உடையத் துவங்குகிறான்

வறண்ட நினைவுகள் மட்டுமே
உள்ளமெங்கு ம் கடைபரப்பித் தொலைக்க
தப்பிக்க வழியின்றி
தலைதெறிக்க ஓடுகிறான்
பாதம் படும் இடமெல்லாம
பாலையாகவே விரிந்து எரிக்கிறது

கண்படும் இடமெல்லாம்
நயவஞ்சகம் நம்பிக்கைத் துரோகம்
கை படுமிடமெல்லாம்
பொய் பித்தலாட்டம் வன்மம்
ஆறுதல் தேடிப் போகும் இடத்தும்
இருள் அரவம் போலித்தனம் பாசாங்கு
தப்பிப் பிழைக்க கண்மூடி
திசைகளறியாது ஓடுகிறான்

மரண தாகத்திற்குக் கிடைத்த சொட்டு நீரும்
விஷமாகிச சிரிக்க
அதலபாதாள நடுவில் கிடைத்த சிறுபிடியும்
நச்சரவாய்  மாறி நெளிய
பதுங்கல் ஒளிதல் ஏதும்
இனி பயனற்றது என அஞ்சி
 முழுமையான விடுதலை மட்டுமே
தனக்கு இனி விடிவு என
விளிம்பிற்கே ஓடுகிறான
 " வாரியணைத்துக் கொள்கிறேன் வா "என
ஒரு பெரும் பூதம் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது

தழல் வீரத்தில் மட்டுமில்லை
மனச் சோர்வின் வீரியத்தில் கூட
குஞ்சென்றும் மூப்பென்றுமில்லை என்பதனை
இறுதிவரை
பாவம் அவன்
அறிந்து தொலைக்கவே இல்லை

14 comments:

கவிதை வானம் said...

ஆறுதல் தேடிப் போகும் இடத்தும்
இருள் அரவம் போலித்தனம் பாசாங்கு.......
அடடா போடவைக்கும் வார்த்தைகள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தழல் வீரத்தில் மட்டுமில்லை
மனச் சோர்வின் வீரியத்தில் கூட//

அவனை நினைத்தால் பாவமாகத்தான் உள்ளது. புரிந்துகொள்ள சற்றே கடினமானதானாலும் மிக நல்லதோர் ஆக்கம். பாராட்டுக்கள்.

கவியாழி said...

நயவஞ்சகம் நம்பிக்கைத் துரோகம்
கை படுமிடமெல்லாம்
பொய் பித்தலாட்டம் வன்மம்
ஆறுதல் தேடிப் போகும் இடத்தும்
இருள் அரவம் போலித்தனம் ///
உண்மை இப்படியும் இருக்கிறார்கள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

கவிதை மிக அரமையாக உள்ளது... ஒவ்வொரு வரிகளும் அற்புதம் பகிர்வுக்கு நன்றி த.ம 2
என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழ்லே:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தழல் உள்ள இடம் குறித்த சொற்கள் மிகவும் அருமையாக இருந்தன.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உண்மை. மன சோர்வு எப்படி இருப்பினும் பாதிப்பு ஒரே மாதிரிதான் அழுத்தமான கவிதை

திண்டுக்கல் தனபாலன் said...

இந்நிலை யாருக்கும் வரக் கூடாது...

G.M Balasubramaniam said...

வாழ்க்கையை வாழ்பவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் அனுபவம்தான்அதில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டா என்ன. விட்டு விலகி நிற்கவும் அனுபவம் கற்பிக்க வேண்டும். உங்கள் படைபில் எனக்கும் பிடித்தது. வாழ்த்துக்கள்

sharkswami said...

அருமை

கே. பி. ஜனா... said...

அருமையான கவிதை... வரிகள் அற்புதம்.
//அதலபாதாள நடுவில் கிடைத்த சிறுபிடியும்
நச்சரமாய்ப் மாறி நெளிய// ’நச்சரவு’ என நினைக்கிறேன் அரவு- பாம்பு.

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //

...திருத்திவிட்டேன்
தவறினைச் சுட்டிக் காட்டியமைக்கு
மனமார்ந்த நன்றி

Yarlpavanan said...


சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

த.ம. +1

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான வரிகள்!

Post a Comment