Thursday, November 20, 2014

இளம் கன்றே நீ பயமறிவாய்

இளம் கன்றே நீ  பயமறிவாய்

குட்டிக்கும் பசுவுக்கும்
வேறுபாடறியும்
ஐந்தறிவுக் காளைகள்
உலவுகிற பூமியில்....

குழந்தைக்கும் பெண்ணுக்கும்
வேறு பாடறியா
ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமியிலே....

இளம் கன்றே  நீ உலகறிவாய்

வெட்டவெளியில் மிருகங்கள்
கூண்டிலினிலே மனிதர்கள்
இருப்பதுவே காட்சிச் சாலை
என்றான  பூமியிலே

சுதந்திரமாய் காமுகர்கள்
பாதுகாப்பாய் குடும்பங்கள்
அதுவொன்றே சரியென்று
ஆகிவிட்ட ஊரினிலே...

இளங்கன்றே  நீ தெளிவடைவாய்

ஒளிந்திருந்து வாழ்ந்தாலும்
குணம் மறைக்காத
மிருகங்கள் வாழ்கின்ற
பரந்துபட்ட உலகினிலே...

மனமதனில் வெறிவைத்து
முகமதனில் இதம்வைத்து
உலவுகின்ற மிருகங்கள்
பெருத்துவிட்ட ஊரினிலே...

19 comments:

கவியாழி said...

மிருகங்களை இனம்காட்டி விட்டீர்கள்

கீதமஞ்சரி said...

பயமறியா இளங்கன்றுக்கு பசுத்தோல் போர்த்திய புலிகளை இனங்கண்டுகொள்ளவேண்டிய அவசியத்தையும் அதனால் கொள்ளவேண்டிய நியாயமான பயத்தையும் உலகம் பற்றிய தெளிவையும் உணர்த்தும் அருமையான வரிகள். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்பதை அழகாய் சொல்லிவிட்டீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.

ஸ்ரீராம். said...

நல்ல அறிவுரை, எச்சரிக்கை.

Thulasidharan V Thillaiakathu said...

எப்பேர்ப்பட்டக் கருத்து!

குழந்தைக்கும் பெண்ணுக்கும்
வேறபாடறியா
ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமியிலே..//

இந்த எருமைகளைப் பற்றிய செய்தியும், பயமில்லாது அந்த எருமைகளால் ஆபத்து வரும் போது தாக்கவும் குழந்தைகள் தயார்ப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகள் என்றால் எருமைகள் நசுக்கப்பட வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமை! அருமை!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எச்சரிக்கையாக இருக்கக் கூறும் தங்களின் கவிதை வரிகள் அதிகம் ரசிக்கும்படியாக உள்ளன.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு விழிப்புணர்வு...

KILLERGEE Devakottai said...

மனிதன் மிருகத்தை விட மோசமானவன் என்பதை தோலுறித்துக் காட்டிய கடைசி நான்கு வரிகள் மிக மிக அருமை ஐயா.

கவிஞர்.த.ரூபன் said...
This comment has been removed by the author.
கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

காலம் உணர்ந்து கவி படைத்த விதம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.
த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

காலத்துக்கேற்ற கவிதை! ஒவ்வொரு வரியும் அருமை! வாழ்த்துக்கள்!

yathavan64@gmail.com said...

ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)

செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு

Unknown said...

சின்னஞ்சிறியக் குழந்தைகளைக் கூட சீரழிக்கும் காமுகர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களே !
த ம 7

Unknown said...

சின்னஞ்சிறியக் குழந்தைகளைக் கூட சீரழிக்கும் காமுகர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களே !
த ம 7

G.M Balasubramaniam said...

ஆதங்கம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும் கவிதை. வாழ்த்துக்கள். உங்கள் ஆதங்கத்தில் நாங்களும் உடன் வருகிறோம்

UmayalGayathri said...

குழந்தைக்கும் பெண்ணுக்கும்
வேறு பாடறியா
ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமியிலே...//
நயம் பட எடுத்துரைத்தீர் ஐயா

தம. 8

Anonymous said...

''..ஆறறிவு எருமைகள்
அதிகமாகும் பூமி..''
ஆம் இன்றைய காலம் இப்படியாகிச் சீரழிகிறது.
நாங்களும் காட்டக்கத்தல் கத்துகிறோம்.
கேட்பார் யாருளர்...
ஆயினும் தொடருவோம்.
வேதா. இலங்காதிலகம்.

V. Chandra, B.COM,MBA., said...

//வெட்டவெளியில் மிருகங்கள்
கூண்டிலினிலே மனிதர்கள்
இருப்பதுவே காட்சிச் சாலை// கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

yathavan64@gmail.com said...

அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!
திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
வலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே...'
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

Post a Comment