Sunday, September 2, 2012

ரூப அரூப ரகசியம்

ரூபங்களை விட
அரூபங்களே சக்திமிக்கவை
ரூபங்கள் அரூபங்களின்
இச்சைக்கு ஆடும்
கருவிகள் மட்டுமே

ரூப அரூப ரகசியம் அறிந்தவன் எவனும்
ரூபத்தின் வழி அரூபத்தை அணுகுவதில்லை
அரூபத்தின் வழியேதான்
ரூபத்தை அறிய முயல்கிறான்

ரூபங்கள்
வெறும் சுற்றுச் சுவர் மட்டுமே
அதனை விலக்கியோ அல்லது தவிர்த்தோ
உள் நுழைந்தால் ஒழிய
அரூப தரிசனம் சாத்தியமே இல்லை

ரூபத்தின் வழி
பார்த்துப்பழகியவன் மட்டுமே
ஓவியத்தின் வெளிக் கோடுகள் இல்லாது போயின்
திருவிழாவின் தாயின் கைவிட்ட பிள்ளைபோல்
மூச்சுத் திணறிப்போகிறான்

அரூபவத்தின் வீரியம் அறிந்தவன்
அலைகளைத்  தாண்டி கடலையும்
எண்ணம்  தாண்டி மனத்தையும்
மிக எளிதாய்த் தெரிந்து தெளிகிறான்

ரூப விழியினில் பார்வையாய்
ரூப உடலினில் உயிராய்
ரூப வார்த்தைகளுக்கும் பொருளாய்
ரூபச் செயல்களின் அர்த்தமாய்
ஊடுருவிக்கிடக்கும்  அரூபத்தை
அறிய முயல்தலே தேடல் எனக் கொள்வோம்
அறிந்து தெளிதலே ஞானம் எனக் கொள்வோம்

30 comments:

குறையொன்றுமில்லை. said...

ரொம்ப அழகான கவிதை வாழ்த்துகள். எனக்கு பிடித்தவரிகள் கீழே

ரூபத்தின் வழி
பார்த்துப்பழகியவன் மட்டுமே
ஓவியத்தின் வெளிக் கோடுகள் இல்லாது போயின்
திருவிழாவின் தாயின் கைவிட்ட பிள்ளைபோல்
மூச்சுத் திணறிப்போகிறான்

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிந்தனை சார்... முடிவில் இரு வரிகள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

Rasan said...

அருமையான கவிதை.
அழகாக கூறியுள்ளீர்கள்.
//திருவிழாவின் தாயின் கைவிட்ட பிள்ளைபோல் //

// அரூபத்தை
அறிய முயல்தலே தேடல் எனக் கொள்வோம்
அறிந்து தெளிதலே ஞானம் எனக் கொள்வோம் //
தேடலையும் மற்றும் ஞானத்தை பற்றி அறிந்து கொண்டேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி.தொடருங்கள் ஐயா.

எல் கே said...

அரூபத்திற்கு மனிதன் கொடுத்த வடிவுதான் ரூபம்

இராஜராஜேஸ்வரி said...

அரூபவத்தின் வீரியம் அறிந்தவன்
அலைகளைத் தாண்டி கடலையும்
மனம் தாண்டி எண்ணங்களையும்
மிக எளிதாய்த் தெரிந்து தெளிகிறான்


ஞானத்தேடலின் விடைகளைத் தெளிவாய் உணர்த்திய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

Thoduvanam said...

அறிய முயல்தலே தேடல்
அறிந்து தெளிதலே ஞானம்.
ஆழ்ந்த சிந்தனை ..அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...


அரூப தரிசனம் கிடைக்க முடியாதது. கற்பனைகளில் வேண்டுமானால் லயிக்கலாம். இல்லாத ஒன்றுக்கு ரூப அடையாளம் கொடுத்து அதுவே உண்மைஸ்வரூபம் என்றே மயங்குகிறோம். உண்மையில் தேடலில் வெற்றி என்பது இயலாதது. மனம் ஒருமுகப் படுத்த உபயோகமாகும் வார்த்தையே தேடல். கானலைத் தேடுதலின் பொருளெ ஞானம் என்று கூறப் படுகிறது. நிம்மதி தேடும் பலர் தேடுதலில் அதை அடைவதாக எண்ணிக் கொள்கிறார்கள். நிம்மதி அடைந்துவிடுவோம் என்று நம்புகிறார்கள். THESE ARE TEMPORARY SOLUTIONS TO PERMANENT PROBLEMS.

Anonymous said...

தேடல் சுகமானது. ஞானத் தேடல் மிக சுவாரசிய சுகமானது. ஞானத் தேடலில் மாயைப் பற்றிய தெளிவும், மாயையை அறிதலும், புரிதலும் அவசியமானது. அதற்கான விளக்கமாய் தங்களின் கவிதை அமைந்திருப்பது சிறப்பு. பகிர்விற்கு நன்றி!
http://www.krishnaalaya.com
http://krishnalayaravi.com

பூங்குழலி said...

ஓவியத்தின் வெளிக் கோடுகள் இல்லாது போயின்
திருவிழாவின் தாயின் கைவிட்ட பிள்ளைபோல்
மூச்சுத் திணறிப்போகிறான்

அருமையான வரிகள்

ஆத்மா said...

அழகான ரூப வரிகள்..... 4

Anonymous said...

''..கானலைத் தேடுதலின் பொருளெ ஞானம்...''
''..ரூபங்கள் அரூபங்களின்
இச்சைக்கு ஆடும்
கருவிகள் மட்டுமே..''
''..அறிய முயல்தலே தேடல் எனக் கொள்வோம்
அறிந்து தெளிதலே ஞானம் எனக் கொள்வோம்..''
மிகச் சிறந்த வரிகள்
நிறைந்த சிந்தனை வரிகள்
மிக நன்று.
வாழ்த்துடன்
வேதா. இலங்காதிலகம்

அன்பு உள்ளம் said...

ரூப விழியினில் பார்வையாய்
ரூப உடலினில் உயிராய்
ரூப வார்த்தைகளுக்கும் பொருளாய்
ரூபச் செயல்களின் அர்த்தமாய்
ஊடுருவிக்கிடக்கும் அரூபத்தை
அறிய முயல்தலே தேடல் எனக் கொள்வோம்
அறிந்து தெளிதலே ஞானம் எனக் கொள்வோம்

அருமையான சிந்தனை தொடர வாழ்த்துக்கள் ஐயா .

kowsy said...

நிச்சயமாக அரூபவத்தின்
பலம் மிக அதிகம். கண்ணால் காணமுடியாத காற்று சுறாவளியாய் மாறுகின்ற போது அதன் வீரியத்தைக் காண்கின்றோமே . அரூபத்தை தேடி ரூபவழி செல்வதை விட ரூபத்தின் அர்த்தத்தை தேடல் சிறப்பு என்பதை யதார்த்தமாய் விளக்கியுள்ளீர்கள். அருமை. அழைப்புக்கு நன்றி. விடுதலை நீங்கிப் பணியுலகில் நுழைந்துள்ளேன். உங்கள் படைப்புக்களினுள் பார்வை செல்லும் காலம் மீண்டும் தொடங்கியது. வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

அரூபத்தின் தேடல்.... ரூபத்தின் மூலம்... தேடிக்கொண்டேதான் இருக்கிறோம்....

மிக நல்ல கவிதை.

த.ம. 5

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா .

அன்புடன் மலிக்கா said...

அரூபவத்தின் வீரியம் அறிந்தவன்
அலைகளைத் தாண்டி கடலையும்
மனம் தாண்டி எண்ணங்களையும்
மிக எளிதாய்த் தெரிந்து தெளிகிறான்///

உண்மைதான் ஐயா..

ரூப அரூபத்தின் விளக்கம் அருமை..பாராட்டுகள் ஐயா

குட்டன்ஜி said...

தேடல்தானே ஞானத்துக்கு இட்டுச் செல்லும்.அருமை ரமணி ஐயா!
போட்டுட்டேன் 8

கதம்ப உணர்வுகள் said...

சித்தரைப்போல் இந்த கவிதை வரிகளை இயற்றி இருக்கீங்க ரமணி சார்.... உருவத்தை விட மனம் சக்தி மிகுந்தவை என்று சொல்லும் வரிகள் மிக அருமை....

ஆமாம். மனம் சொல்கிறபடி தான் மனிதன் ஆடிக்கொண்டு இருக்கிறான்.. மனிதனின் செயல்பாடுகள் மிக அதிசயமானவை... மனம் நல்லதைச்சொல்லும்போது அதை காதுகொடுத்து கேட்க பிரியப்படாதவன் தவறான வழிக்கு செல்ல ஆசைக்காட்டும்போது அதற்கென ஒரு நியாயத்தை தானே ஏற்படுத்திக்கொள்வான்...

புறம் ஒரு கருவி மட்டுமே.. அருமையான விஷயத்தை எளிமையா சொல்லி இருக்கீங்க. ஆமாம்... அகம் சொல்படி ஆடும் பொம்மைகளாக கருவிகளான நாம்....


எது நிலை.... எது நல்லது.... எது இறைவனின் பதம் நம்மை சேர்க்கும் என்பதை தெளிவாய் அறிந்தவன் ரூபத்தின் உதவியை நாடுவதில்லை.. ரூபத்தைப்பற்றி கவலைப்படுவதுமில்லை.... ஆன்மாவே ரூபத்துக்கு பலம் சேர்க்கும் என்ற உண்மையை அறிந்தவன் முற்றும் துறந்த ஞானியாகிறான்... பற்றை ஒழித்து முனிவனாகிறான்...

ரூபங்களின் செயல்பாடு அரூபத்தை நெருங்கவிடுவதில்லை என்பதே நிதர்சனம்.... ரூபத்தின் ஆட்டமும் கவர்ச்சியும் வசீகரமும் தடைக்கல்லாக அரூபத்தை நெருங்கவிடாமல் சிந்தனையை திசைத்திருப்பிவிடும்.... ஆனால் அரூபம் ஆற்றல் உடையது... ஆன்ம பலம் பெருக்கினாலொழிய அரூபத்தை அடைவது அசாத்தியமாகிறது. அரூப தரிசனம் பெற்றுவிட்டப்பிறகோ ரூபத்தைப்பற்றிய பற்று விட்டு போகிறது.... கட்டுப்பாடு தனக்கு தானே சுயக்கட்டுப்பாடு விதித்துக்கொண்டு இச்சையில் இருந்து தன்னை வில(க்)கி உண்மையான சக்தி எது என்று திண்மையாக அறிந்து அரூப தரிசனம் கண்டுவிட்டால்.... அவனே தெய்வமாகிறான்... நான் என்பதை ஒ(அ)ழித்து ”அது”வானால் தான் இது சாத்தியம்....

கதம்ப உணர்வுகள் said...

உண்மை உண்மை.... மிக அருமையான உவமை.... ரூபத்தின் மீது பற்று வைப்பவனின் நிலை இப்படி தான் தாயின் கைவிட்ட பிள்ளைப்பொல நிராதரவாய் உணர்வது.... உயிர்மூச்சு பிரிவது போன்று அவஸ்தைக்குள்ளாகிறான்...


ரூபத்திற்கு தான் தேவைகள் அதிகமாகிறது... அரூபத்தை அடைய மனதை ஒருமுகப்படுத்தினாலே போதும்... ஆனால் அது மிக மிக மிக கடினம்... கண்ணை மூடினாலே பிரச்சனைகளும், ஆசைகளும், கடன்களும், தேவைகளும், மன்னிக்க இயலாத்தன்மையும் ரூபத்திற்கே உரிய லட்சணங்களாகி அரூபத்தை அதன் சௌந்தர்யத்தை, அதன் நிம்மதியை அறியமுடியாமல் செய்துவிடுகிறது... மனிதன் இதை எல்லாம் தாண்டி அரூபத்தின் எல்லையைத்தொட்டுவிட்டால்..... அடுத்தவர் நினைக்கும் எண்ணங்களை தான் உள்நுழைந்து பார்க்கும் சக்தியைப்பெற்றுவிடுகிறான்...

எத்தனை அருமையான சிந்தனை... எத்தனை உயர்வான சிந்தனை.... பற்றிக்கொள்... ஆனால் பற்றை விடு..... என்று சொல்வது போல உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரை... உணர்வை... உன்னில் இருந்து பிரிந்து வெளியே வந்து உன்னை நீயே பார்.... உன் செயல்களை கவனி... உன்னில் இருந்து வெளிபடும் வார்த்தைகளை உன்னிப்பாய் உச்சரிக்கும்போது நுணுக்கமாய் கவனி... உன் தவறுகள் தெரிய வரலாம்.. உன்னை திருத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்... உன்னில் இருக்கும் நல்லவை அல்லாததெல்லாம் களைய அரூபமாய் உன் ரூபத்திலிருந்து வெளிவந்து உன்னை கவனிக்கப்பழகு.... உன் அரூபம் உனக்கு உணர்த்தும் உன்னைப்பற்றிய ரகசியங்கள் ஒரு கோடி.... என்று அழகாய் அருமையாய் சிந்திக்கவைத்த மிக மிக அற்புதமான கவிதை வரிகள் படைத்து எங்களை ஆழ்ந்து எங்கள் மனதை தரிசிக்க வேண்டிய கவிதை தந்தமைக்கு அன்பு நன்றிகள் ரமணி சார்....

சிந்தனையின் துளிகள் தினம் தினம் பெருகிக்கொண்டே இருக்கிறது.... சிந்திக்க சிந்திக்க ஆற்றலும் கூடிக்கொண்டே இருக்கிறது.... ஆற்றல் கூடக்கூட கவிதைகளின் தன்மை மெருகேறிக்கொண்டே இருக்கிறது... மெருகேறிய கவிதைகளோ எங்களை முழுமையாக ரசிகர்களாக்கிவிட்டது.....

என்றும் உங்கள் ஆரோக்கியம் சிறக்க இறைவனிடம் அன்பு பிரார்த்தனைகள் ரமணி சார்...

பால கணேஷ் said...

ஹப்பா... உங்களின் எழுத்தைப் படித்ததும் என்னுள் எழுந்த எண்ணங்களையும் அவற்றையும் தாண்டின விஷயங்களையும் இங்கே தோழி மஞ்சுபாஷிணி கொட்டி விட்டார். அதைவிட பெரிதாய் நான் என்ன சொல்லிவிட முடியும்? ஒரே வார்த்தைதான்... அருமை ஸார்!

Seeni said...

mmmmmmmmmmmm............

Rathnavel Natarajan said...

அருமை.
நன்றி.

Unknown said...

ஆழமான வரிகள் ...அற்புதமான சிந்தனை..
கவிதை படைபிற்கு எனது மனமார்ந்த நன்றி..
கடவுள் எனும் சக்தி அரூபமானதால் தான் இன்னும் அறிந்து கொள்ளும் ஆர்வம் பலவிதங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...மிக்க மகிழ்ச்சி...

r.v.saravanan said...

அறிய முயல்தலே தேடல் எனக் கொள்வோம்
அறிந்து தெளிதலே ஞானம் எனக் கொள்வோம்


நல்ல சிந்தனை பதிவாக்கி தந்தமைக்கு நன்றி சார்

Unknown said...

ரூபங்களை விட அரூபங்களே சக்திமிக்கவை.... அறிந்துக்கொள்ள தெளிவான பதிவு... நல்ல பதிவு

இட்லி சுவைத்திட உங்களை வலைக்கு இனிதே அலைகிறேன், வருகவும், ருசிக்கவும், பதிவிடவும்... நன்றி

சக்தி கல்வி மையம் said...

அறிந்து தெளிதலே ஞானம் எனக் கொள்வோம்

இந்திரா said...

//அரூபவத்தின் வீரியம் அறிந்தவன்
அலைகளைத் தாண்டி கடலையும்
மனம் தாண்டி எண்ணங்களையும்
மிக எளிதாய்த் தெரிந்து தெளிகிறான்//

உண்மை

NKS.ஹாஜா மைதீன் said...

nice sir

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு கருத்துச் செறிவுள்ள படைப்பு! நன்றி!

இன்று என் தளத்தில்
தளிர்ஹைக்கூ கவிதைகள்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html

ஹேமா said...

மனிதன்தானே எல்லாத்துக்கும் பெயர் வைக்கிறான்.அதுபோலவே !

Post a Comment