Tuesday, September 19, 2017

"வரம் கொடுத்தவன் தலையிலேயே

"வரம் கொடுத்தவன்
தலையிலேயே
கைவைக்க முயற்சித்த
அசுரன் கதையில்
எனக்கு நம்பிக்கையில்லை"
என்றார் அந்த முதியவர்

"எனக்கும் அப்படித்தான்
அரக்கனே ஆயினும் கூட
அப்படிச் செய்ய மனம் வருமா ?"
என்றார் அடுத்தப் பெரியவர்

அடுத்திருந்தப் பெரியவர் மட்டும்
"எனக்கு நம்பிக்கை இருக்கிறது
முயற்சித்த இல்லை
கைவைத்த....."
என்றார் விரக்தியாய்

பெரியவர்கள் இருவரும்
ஒரு பத்தாம்பசலியைப்
பார்ப்பதுப் போல
அவரைப் பார்க்க...

அவர் இப்படிச் சொன்னார்
"வாரீசுகள் வசதியாய் இருந்தும்
இந்த வயோதிகர் இல்லத்தில்
இருக்கிற நாமெல்லாம் யாராம்?
அனுப்பி வைத்தவர்கள் எல்லாம் யாராம் ?"
என்றார் மெல்லச் சிரித்தபடி

சிறிது நேரம் யாரும்
பேசிக் கொள்ளவுமில்லை
ஒருவர் முகத்தை ஒருவர்
பார்த்துக் கொள்ளவுமில்லை

மெல்லக் கனத்த இருள்
சூழத் துவங்கியது
வெளியிலும்....

Monday, September 18, 2017

யாருக்குப் பொருந்தும் ?

யாருக்குப் பொருந்தும் ?

திருடிக் கொண்டு ஓடுகையில்
கண்டு கொண்ட
மக்கள் கூட்டம்
"திருடன் திருடன்' எனக் கத்தியபடி விரட்ட

கெட்டிக்காரத் திருடன்
தானும்
"திருடன் திருடன் " எனக் கத்தியபடியே
முன்னே ஓடுகிறான்

பார்ப்பவரையும்
விரட்டுபவர்களையும்
குழப்பியபடியும்
ஏமாற்றியபடியும்..

துரோகம் இழைத்ததற்காக
"அவர்" இருக்கையில்
ஒதுக்கியே வைக்கப்பட்டவர்
இப்போது
"துரோகிகள் துரோகிகள் "
என அனைவரையும்
தூற்றியபடியே
நகர் வலம் வந்து கொண்டிருக்கிறார்

தொண்டர்களையும்
மக்களையும்
முட்டாள்கள் என
நினைத்தபடி
கணித்தபடி

(இது யாருக்குப் பொருந்தும் என
கணிக்க முடியாதவர்களுக்கு
ஒரு அருமையான க்ளூ

அவர் மூன்றெழுத்து இன்சியலால்
அழைக்கப்படுபவர்

மூவரும் அப்படித்தானே அழைக்கப்படுகிறார்கள்
என நீங்கள் யூகித்தால் அதற்கு
நான் பொறுப்பல்ல )

Friday, September 15, 2017

நிகழ்வுகள்

நாளை (16-09-2017) காலை 9 மணிக்கு மதுரை பாத்திமா கல்லூரித் தமிழ்த்துறை மாணவியரைக் கொண்டு முனைவர்.மு.இராமசாமி உருவாக்கிய 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' நாடகம் நிகழ உள்ளது. வாய்ப்புள்ளோர் அவசியம் வருக! ....

Monday, September 11, 2017

நல்லதோர் வீணையாய்....

"நல்லதோர் வீணையாய் "அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை" யென்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை விடுவித்து
கவிதையை அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே" தன் கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"  இருக்கும்வரைச் சோராதிருந்தான்
அதனால்தானே இளம்வயதில்
 காலனவன் அழைத்தபோதும்
காலத்தை வென்றவனாய் காவிய மானவனாய்
பாட்டுக்கொருவனென  இன்றளவும்
 அவன் மட்டுமே பரிமளிக்க முடிகிறது

Wednesday, August 30, 2017

மரியா மாண்டிச் சோரி

ஆடிப்பாடி எல்லோரும் கொண்டாடுவோம்
ஆனந்தமாய் இந்தநாளைக் கொண்டாடுவோம்
கூடிப்பாடி மகிழ்வுடனே கொண்டாடுவோம்-மாண்டிச்சோரி
பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்

குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை
அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை
உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்
அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா

பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை
குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என
எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்
பிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா

திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்
புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை
அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்
வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா

இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்
தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற
சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை
இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா

(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)

Monday, August 28, 2017

கர்ணனும் சித்தாள் முனியம்மாவும்

கருவண்டாகிச்
சதிகாரக் கண்ணன்
தன் தொடை துளைத்த போதும்
இரத்தம் ஆறாய்ப்
பெருக்கடுக்க
வலி தீயாய்ப்
பொசுக்கியபோதும்
அலுப்பில் அயர்ந்த
குரு நாதரின் துயில்
கலையக் கூடாதென
கற்சிலையாய் இருக்கிறான்
பாரதக் கர்ணன்

வறுமை தந்த
சோர்வும் நோவும்
மெல்லப் படுத்தியெடுக்க
அதன் காரணமாய்
அடிவயிற்றிலிருந்து கிளம்பும்
அடக்கவொணா இருமலை
அரைவயிற்றுப் பசியில்
மார்பில் அயர்ந்த குழந்தை
விழித்துவிடக் கூடாதென
உதடு கடித்து விழுங்கித்
தாய்மைக்கு இலக்கணமாகிறாள்
சித்தாள் முனியம்மா

ஒப்பு நோக்கின்
இரண்டில் ஒன்றுக்கொன்று
சளைத்ததில்லையாயினும்

என்றோ ஒருமுறை
நடப்பதற்கும்
அன்றாடம் நடப்பதற்குமான
வித்தியாசத்தில்

கர்ணனையும் மீறி
என் மனத்தில் உயர்கிறாள்
சித்தாள் முனியம்மா

Sunday, August 27, 2017

எங்கள் ஐயனார்சாமி

சிறு வயதில்
வாரம் இருமுறை
எங்கள் ஐயனார்சாமியைப்
பார்க்கவில்லையில்லை யெனில்
என் மனம் ஒப்பாது

ஊருக்கு
வெகு வெகுத் தொலைவில்
குதிரையில்
மிக மிக உயரத்தில்
அமர்ந்தபடி
ஊரையே
பார்த்துக் கொண்டிருப்பார்
காத்துக் கொண்டிருப்பார்
எங்கள் ஐயனார்சாமி,,

ஊரின்
ஒவ்வொரு வழித்தடமும்
அவர் பார்வையில் இருக்கும்
ஊரின்
எந்த ஒரு சிறு நிகழ்வும்
அவர் ஆசி வழங்கவே துவங்கும்

குற்றப் பயத்தாலோ
தீவீர நோயாலோ
வருடத்துக்கு இருவர்
இரத்தம் கக்கிச் சாகப்
படையல் கூடிப் போகும்
ஐயனாரின் பலம் கூடிப்போகும்
குற்றங்களும் குறைந்துப் போகும்


இப்போது ஊர்
கிழக்கு மேற்காய்
மிக விரிந்துப் போகக்
கட்டிடங்களும்
மிக உயர்ந்துப் போகத்
தன் இருப்பிடம் தெரியாதும்
தன் நெடியப் பார்வையற்றும் போனார்
எங்கள் ஐயனார்சாமி

நோய்க்கு மருத்துவரும்
காவலுக்குக் காவல் நிலையமும் வர
படையல்கள் குறையக்
கொஞ்சம் விலகவும்
பார்வையைக் குறைக்கவும்
துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

சமீபத்தில் இரண்டுமுறை
அவர் உண்டியலே
உடைத்துத் திருடப்பட
கண்காணிப்புக் கேமரா
பொருத்தப்படத்
"தனக்கே காவலா " என
நொந்து போனதன் அடையாளமாய்
மெல்ல மெல்ல
விரிவுபடத் துவங்கினார்
எங்கள் ஐயனார்சாமி

ஜபர்தஸ்தாய்
சாரட்டில் பார்த்த ஜமீந்தாரை
நடக்கப் பார்த்து
நொந்தக் கதையாய்
மேகம் தொட்டு நின்ற
எங்கள் ஐயனார்சாமியை
இடுக்கில் பார்ப்பதற்கு
எனக்கும்
மனம் ஒப்பவில்லை

வலுக்கட்டாயமாய்
அவரைப்பார்ப்பதைத்
தவிர்க்கத் துவங்கினேன் நான்

எங்கள்
ஐயனார்சாமிக்கும்
மனம் ஒப்பாதே
இருந்திருக்க வேண்டும்

இல்லையெனில்
எத்தனையோ
புயல் மழையைத்
தூசியாய்த் தள்ளியவர்
நேற்றையச் சிறுத்தூறலுக்கு ...

என்ன சொல்வது ?
எப்படிச் சொல்வது ?